ந்திரன் சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல நிகழ்வுகள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் சில...

Advertisment

மாசி மகத் திருநாளன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயினி என்ற பெயரில் வலம்புரிச்சங்கில் குழந்தையாக அவதரித்தாள். அந்த சமயத்தில் அங்கு தன் மனைவியுடன் நீராடவந்த தக்கன் என்ற மன்னன், அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்தான்.

இந்நாளில்தான் முருகப் பெருமான் சுவாமிமலை திருத்தலத்தில், தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

மகாவிஷ்ணு வராக அவதாரமெடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்து, பாதாளத்தில் அவன் ஒளித்துவைத்திருந்த பூமாதேவியை வெளிக்கொணர்ந்த நாள் மாசி மாத மக நட்சத்திர நாள் என்று புராணம் கூறுகிறது.

Advertisment

muu

இதேநாளில்தான் சிவபெருமான் பள்ளி கொண்டப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார்கடனுக்குரிய வழிபாட்டினை நடத்தினார். சிவபக்தனான வல்லாள மகாராஜனுக்கு வாரிசு இல்லாததால், சிவபெருமான் நீத்தார்கடன் அளித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில்விட்ட பாவம் குந்திதேவியை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்யவேண்டி உமேச முனிவரை சந்தித்தாள். அவர், "மாசிமக நாளன்று ஏழு கடல்களில் நீராடினால் பாவம் நீங்கும்' என்றார். அப்போது, "எப்படி ஒரேநாளில் ஏழுகடல்களில் நீராடுவது?' என்று இறைவனை வேண்டினாள்.

Advertisment

"திருநல்லூர் கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழுகடல்களாக பாவித்து மாசிமக நாளில் நீராடுவாயாக' என்று அசரீரி ஒலித்தது. அதன்படியே குந்தி அந்தத் தீர்த்தத்தில் நீராடி புனிதம் பெற்றாள். குந்தி நீராடிய தீர்த்தம் "சப்த சாகர தீர்த்தம்' என்று இன்றும் போற்றப்படுகிறது.

மாசிமகம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளென்று போற்றுவர். இந்நாளில் முருகப் பெருமானுக்காக விரதம் கடைப்பிடித்து வழிபடின், மறுபிறவியில்லை என்று வேதநூல்கள் கூறுகின்றன. அன்று விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால், இல்லத்தில் ஆண்வாரிசு வளமுடன் வாழும் என்பது நம்பிக்கை.

மக நட்சத்திரத்தன்று அதற்குரிய தெய்வமான குருபகவானுக்கு மஞ்சளாடை அணிவித்து, மஞ்சள் மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும்; நற்பலன்கள் கிடைக்குமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

மேலும், சில கோவில்களில் மாசிமாத மக நட்சத்திரத்தன்று திருவிழா நடைபெறுவதையும் காணலாம். திருநெல்வேலிலி நெல்லையப்பர் ஆலயத் தெப்பக்குளத்தில் அப்பர் பெருமானை எழுந்தருளச் செய்து. உலாவரச்செய்வது வழக்கம். இதற்கு "அப்பர் தெப்பம்' என்று பெயர்.

சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டதும் மாசிமகப் பௌர்ணமி என்கிறது புராணம். அவன் தன் கண்களுக்கு மட்டும் தெரியும்வண்ணம் உயிர்பெற சிவபெருமானிடம் வரம் பெற்றாள் ரதிதேவி.

இந்த நாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுவது போற்றப் படுகிறது. மகாமகக் குளத்தில் நீராட இயலாதவர்கள் மாசிமக நன்னாளில் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனித நீர்நிலையில் நீராடிப் பலன் பெறலாம். அப்போது...

"கங்கேச யமுனே கோதாவரி சரஸ்வதி

நர்மதா சிந்து காவேரி

ஜலேஸ்மின் சந்நிதிம் குரும்'

என்னும் சுலோகத்தைச் சொல்லி நீராடவேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.